உடுமலை: பல்வேறு காரணங்களால், களிமண் விளை நிலங்களில், மறைந்து வரும் கொண்டைக்கடலை சாகுபடியை மீட்க, அரசு உதவ வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழை சீசனில், மேற்கொள்ளப்படும் மானாவாரி சாகுபடி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்பகுதியிலுள்ள களிமண் நிலங்களில், இந்த சீசனில், கொண்டைக் கடலை, அதிக பரப்பில், சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கருப்பு சுண்டல் எனப்படுவது இவ்வகை கடலையே ஆகும். சீதோஷ்ணம் முக்கியம் இச்சாகுபடிக்கு, விதைப்பின் போது மழை, செடியின் வளர்ச்சித்தருணத்தில், பனிப்பொழிவு, பூ பிடிக்கும் தருணத்தில், கீழ்திசை காற்று என பருவ நிலையும் ஒத்துப்போவது அவசியமாகும். இவ்வாறு, பருவநிலை ஒத்துழைத்தால், ஏக்கருக்கு, 700 முதல் 800 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். பிற பகுதிகளில், பெரும்பாலும் இவ்வகை கடலை விளைவது இல்லை. உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தின் பிரத்யேக சாகுபடியாக இருந்த, கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு, கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து விட்டது. இந்தாண்டும், இவ்வகை சாகுபடியை தேடும் நிலை உருவாகி விட்டது. இருப்பினும், சில பகுதிகளில், கொண்டைக்கடலை விதைப்பு செய்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: கொண்டைக்கடலை முன்பு, 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், சாகுபடியாகி வந்தது. பருவநிலை மாற்றத்தால், செடிகளில் நோய்த்தாக்குதல் அதிகரித்து, ஆறுக்கும் அதிகமான முறை மருந்து தெளிக்க வேண்டிய நிலை உருவானது. இதனால், சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்தது. மேலும், களையெடுத்தல் பணிக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. செடிகளில் ஒரு வகை, புளிப்புத்தன்மை இருக்கும் என்பதால், காலை, 9:00 மணிக்குள், அறுவடை செய்ய வேண்டும். இப்பணிக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. இவ்வாறு, சாகுபடி முழுவதும் போராடினாலும், ஏக்கருக்கு, 300 கிலோ விளைச்சல் கிடைப்பதே அரிதாகி விட்டது. அறுவடையின் போது, இறக்குமதி உள்ளிட்ட காரணங்களால், விலையும் கிடைப்பதில்லை. எனவே, ஒவ்வொரு ஆண்டும், கொண்டைக் கடலை சாகுபடியில், ஏக்கருக்கு, 10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள், சாகுபடியை கைவிட்டு விட்டனர். நடப்பாண்டும் குறைவான பரப்பிலேயே கொண்டைக்கடலை விதைப்பு செய்ய வாய்ப்புள்ளது. உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு மீண்டும் அதிகரிக்க, நேரடி கொள்முதல் உள்ளிட்ட திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.