கோவை;நடப்பு நிதியாண்டு நிறைவடையவுள்ள நிலையில் எஸ்.யூ.சி., எனும் 'சேவை பயன்பாட்டு கட்டணம்' அபரிமிதமாக இருப்பது பொது மக்களிடம் வரி வசூலில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட வரியினங்கள் வாயிலாக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம், 5.65 லட்சம் வரி விதிப்பு தாரர்கள் உள்ள நிலையில், இன்னும் ரூ.200 கோடிக்கு மேல் வரியினங்கள் வசூலிக்க வேண்டியுள்ளது.நடப்பு, 2023-24ம் நிதியாண்டு அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, வரி வசூலர்கள் வாயிலாக, 100 வார்டுகளிலும் வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட காலமாக அதிக வரித் தொகை நிலுவை வைத்துள்ள கட்டடங்கள் முன்பு சொத்து வரி நிலுவை குறித்த 'பிளக்ஸ் பேனர்' வைத்து வசூல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதேசமயம், எஸ்.யூ.சி., எனப்படும் சேவை பயன்பாட்டு கட்டணம் பொது மக்களிடம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணமானது எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்ற விபரங்கள் வரி வசூலர்களுக்கே தெரியாது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அதாவது, சொத்து வரியை விட, ரூ.3,000, ரூ.6,000 என, பல மடங்கு அதிகமாக இருப்பதாக வரி வசூலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தொழிற்சாலைகள், ஒர்க் ஷாப் உரிமையாளர்களிடம் பதிலளிக்க முடியாததுடன், வசூலில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குமுறுகின்றனர்.மாமன்ற கூட்டங்களில் எஸ்.யூ.சி., கட்டண பாதிப்பு குறித்து கவுன்சிலர்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் தரப்பிலோ அரசிடம் முறையிடப்படும் என, சமாளிக்கின்றனர். இப்படியிருக்க வரிச் சுமையால் பாதிக்கப்படுவது மக்கள்தான்.
வசூலில் பின்னடைவு!
வரி வசூலர்கள் கூறுகையில்,'எஸ்.யூ.சி., கட்டணமானது சொத்து வரியை விட பல மடங்காக வருவதால் மக்களுக்கு பதிலளிக்க முடியவில்லை. குடியிருப்புகளுக்கு ஒரு கட்டணம் என்றால் தொழிற்சாலைகளுக்கு அதைவிட அதிகம். இதனால், நல்ல முறையில் வரி செலுத்திவந்தவர்களும் செலுத்த தயங்குவதால் இன்னும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலாக வேண்டியுள்ளது. எஸ்.யூ.சி., கட்டணத்தை குறைத்து மறு சீரமைப்பு செய்தால் மட்டுமே வரி வசூலில் இருக்கும் பின்னடைவு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்' என்றனர்.