கோவை: நெல்லையில் நடந்த மாநில அளவிலான கூட்டுறவு வார விழாவில், சிறப்பாக செயல்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த மூன்று சங்கங்களுக்கு, மாநில அளவில் விருது வழங்கப்பட்டது. கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, நவ. 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை, கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. மாநில அளவிலான விழா, கடந்த 20ம் தேதி திருநெல்வேலியில் நடத்தப்பட்டது. இதில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், செயலாளர் சத்யபிரதா சாஹு உட்பட பலர் பங்கேற் றனர். மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட சங்கங்களுக்கு, மாநில அளவில் விருது வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட கடனுதவி, வசூல் செய்யப்பட்ட சதவீதம், வளர்ச்சிக்கு மேற்கொண்ட நடவடிக்கை உட்பட விபரங்கள் சேகரிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. அவ்வகையில், கோவை மாவட்டத்தில், சுல்தான்பேட்டை செஞ்சேரிமலையடிப்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண் ஊரக வளர்ச்சி வங்கி, சிங்காநல்லுார் நகர கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவை, மாநில அளவில் சிறந்த சங்கங்களாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டன. இதுகுறித்து, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் உள்ள 137 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், கடந்த காலத்தில் 6 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டன. தற்போது, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு, மாவட்டத்தில் இருக்கும் அனைத்து சங்கங்களையும், 7 கோடிக்கு மேல் கடன் வழங்கும் நிலைக்கு உயர்த்தியுள்ளோம். மாவட்டத்தில் உள்ள மூன்று சங்கங்களு க்கு, மாநில அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது, உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.