உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுலா வளர்ச்சி பணிகளில் திடீர் அக்கறை : படகு இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு

சுற்றுலா வளர்ச்சி பணிகளில் திடீர் அக்கறை : படகு இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு

வால்பாறை: வால்பாறையில், கிடப்பில் போடப்பட்டுள்ள சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக இருப்பதால், சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்நிலையில், நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலை அடுத்து, சுற்றுலா பயணியர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணியரை மிகிழ்விக்க நகராட்சி சார்பில் படகுஇல்லம், தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர வனத்துறையினர் சார்பில் பல்வேறு சுற்றுலா பகுதிகள் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், சுற்றுலா பகுதிகள் பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக உள்ளன. தேவையான அடிப்படை வசதிகளும் இல்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வால்பாறை நகரில் உள்ள படகுஇல்லத்தில் கழிவு நீர் தேங்கியதால் செயல்படவில்லை. இதே போல் பூங்காவும் பராமரிப்பு இன்றி இருப்பதால், சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில், வால்பாறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் குமரன், சுற்றுலாத்துறை தொழில்வழிகாட்டு அலுவலர் ஸ்ரீயாஸ், நகராட்சி பொறியாளர் ஆறுமுகம்உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக படகுஇல்லம், தாவரவியல்பூங்கா பராமரிக்கபட்டு, புதுப்பொலிவுடன் சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படும். சுற்றுலாத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 'யாத்திரை நிவாஸ்' இடிக்கப்பட்டு, புதியதாக நவீன முறையில் சுற்றுலா பயணியர் வசதிக்காக தங்கும்விடுதி கட்டப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் விரைவில் துவங்கப்படும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி