| ADDED : மார் 21, 2024 07:01 AM
போத்தனூர் : தமிழ்நாடு, புதுச்சேரி விஸ்வகர்மா சமூக கட்டமைப்பு, லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது. விஸ்வபாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளரும், தமிழ்நாடு, புதுச்சேரி விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பின் நிறுவன தலைவருமான சிவசண்முகசுந்தரபாபு சுவாமிகள் தலைமையில், விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்க தலைவர் தங்கராஜ் ஆகியோர், அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமியை சென்னையில் நேற்று முன்தினம் சந்தித்தனர். அப்போது, நலவாரியம், வங்கியில் நகை மதிப்பீட்டாளர், சமூக பெண்களுக்கு இலவச வீடு அல்லது வீட்டுமனை பட்டா வழங்கல் உள்ளிட்ட, ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். மேலும் வரும் லோக்சபா தேர்தலில், தங்கள் ஆதரவை அ.தி.மு.க., கூட்டணிக்கு அளிப்பதாகவும் கூறினர். விஸ்வபாரத் மக்கள் கட்சி, தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.