ஈமச்சடங்கு முன் பணம் வழங்குங்க உதவி பெறும் ஆசிரியர்கள் கோரிக்கை
கோவை : தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம், 'குழு காப்பீடு திட்டம்' என்ற பெயரில் மாதந்தோறும் ரூ.110 பிடித்தம் செய்யப்படுகிறது. பணியில் இருக்கும்போது, ஓர் ஆசிரியர் உயிரிழந்தால், வாரிசுதாரருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்; இத்தொகை பெற ஆறு மாதங்கள் வரை குடும்பத்தினர் காத்திருக்க வேண்டியுள்ளது. ஈமச்சடங்கு செய்வதற்கு முன்பணம் வழங்கப்படுவதில்லை. அதேநேரம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'குடும்ப நல நிதி திட்டம்' என்ற பெயரில் ரூ.110 பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்களுக்கு ஈமச்சடங்கு முன்பணமாக, ரூ.25,000 உடனடியாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகை ஓரிரு வாரங்களில் விடுவிக்கப்படுகிறது. இரு தரப்பு ஆசிரியர்களும், ஒரே மாதிரியான பணிகளைச் செய்து வந்தாலும், உயிரிழக்கும் பட்சத்தில் வழங்கப்படும் நிதியுதவி மற்றும் நடைமுறைகளில் வேறுபாடு இருப்பதை, அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்கள் கூறுகையில், 'அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக பணிபுரிகிறோம். காப்பீடு திட்டத்தில், அரசு பாரபட்சம் காட்டுகிறது. எதிர்பாராத உயிரிழப்பு ஏற்படும்போது, குடும்பத்தின் உடனடித் தேவையை பூர்த்தி செய்ய, ஈமச்சடங்கு முன்பணம் அவசியமாகிறது. இத்தொகையை எங்களுக்கும் வழங்க வேண்டும். காப்பீடு திட்டத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்' என்றனர்.