உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூங்காவில் உயிரினங்கள் ஏக்கம்... நல்ல நேரம் பார்க்கிறது மாநகராட்சி நிர்வாகம்

பூங்காவில் உயிரினங்கள் ஏக்கம்... நல்ல நேரம் பார்க்கிறது மாநகராட்சி நிர்வாகம்

கோவை : கோவை வ.உ.சி., பூங்கா வளாகத்தில், முதலை, குரங்கு, மான், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் இன்னமும் பராமரிக்கப்படுகின்றன. மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் உத்தரவை, மாநகராட்சி நிர்வாகம் மீறுவதாக, குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.கோவை மாநகராட்சி பராமரிப்பில் வ.உ.சி., உயிரியல் பூங்கா உள்ளது. வாத்து, மயில், முதலை, பாம்பு, கிளி, மான் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டன.இங்கு உயிரியல் பூங்கா செயல்படுவதை அறிந்த, டில்லி மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகள், பூங்கா வளாகத்தை ஆய்வு செய்தனர். போதிய வசதியின்றி, குறுகிய பரப்பளவில் அதிக உயிரினங்கள் பராமரிப்பதை கண்டறிந்தனர். பாம்புகளை சிறிய கண்ணாடி கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக, ஆணையம் விசாரணை நடத்தியது.கோவை மாநகராட்சி அதிகாரிகள் டில்லி சென்று, விளக்கம் அளித்தனர். அப்போது, பூங்காவை மேம்படுத்தப் போவதாக உறுதியளித்து, விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தனர். அதை ஏற்ற ஆணையம், அத்திட்டத்தை செயல்படுத்த அவகாசம் வழங்கியது.நிதி ஒதுக்கீடு செய்து, வ.உ.சி., பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் மேம்படுத்தவில்லை. இதனால், உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்த, மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், உயிரினங்களை அருகாமையில் உள்ள, மற்ற உயிரியல் பூங்காக்களில் ஒப்படைக்க அறிவுறுத்தியது.வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இங்குள்ள உயிரினங்களை பாதுகாப்பாக, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சென்னை வண்டலுாரில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு இடம் மாற்ற அறிவுறுத்தினர்.முதல்கட்டமாக, கடந்த நவ., மாதம் முதலை, பாம்பு, பெலிக்கான் உள்ளிட்ட சில உயிரினங்கள் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டன. வாத்து, மயில், குரங்குகள், பாம்புகள் மற்றும், 3 முதலைகள், கடமான், மான்கள் உள்ளிட்டவை, இன்னும் வ.உ.சி., பூங்காவில் பராமரிக்கப்படுகின்றன.பூங்கா இயக்குனர் சரவணனிடம் கேட்டதற்கு, ''முதல்கட்டமாக, சில உயிரினங்கள் இட மாற்றம் செய்யப்பட்டன. மீதமுள்ள உயிரினங்கள், படிப்படியாக அனுப்பி வைக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இங்கு பறவைகள் பூங்கா ஏற்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது,'' என்றார்.இன்னும் எத்தனை வருஷம் இப்படி ஆலோசிப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் ஆணையம் உத்தரவிட்டும், வாயில்லா ஜீவன்களை விதிமீறி அடைத்து வைத்திருப்பவர்கள், 'செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும்' இருப்பது மட்டும் நன்கு தெரிகிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை