அன்னுார்:அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தக் கோரி, இன்று நடக்கயிருந்த ஆர்ப்பாட்டம் விளக்கக் கூட்டமாக மாற்றப்பட்டது.கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டம், 1,942 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டது. 95 சதவீத குளம், குட்டைகளில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.மேலும், மூன்று மாவட்டங்களில் விடுபட்ட 1,400 குளம் குட்டைகளுக்கான அத்திக்கடவு இரண்டாம் திட்ட பணிகள் துவக்கப்படவில்லை. பணிகளை துவக்க வலியுறுத்தியும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த அத்திக்கடவு திட்ட ஆர்வலர்கள் சார்பில், இன்று அவிநாசியில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.கிராமங்கள் தோறும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு திரட்டப்பட்டது. நேற்றுமுன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில், திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து, முதல்வரிடம் வலியுறுத்துவதாகவும், இரண்டாம் திட்ட பணிகள் துவக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, அத்திக்கடவு திட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்களிடம் உறுதியளித்தார்.இதையடுத்து, அத்திக்கடவு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன், கணேசன் ஆகியோர் கூறுகையில், 'அமைச்சரின் உத்தரவாதத்தை ஏற்று, ஆர்ப்பாட்டத்துக்கு பதில் உள் அரங்கத்தில் விளக்க கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மார்ச் 1 (இன்று) காலை 9:30 மணிக்கு அவிநாசி, மங்கலம் சாலையில் உள்ள ரோட்டரி ஹாலில் நடக்கும் விளக்கக் கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்க வேண்டும்' என்றனர்.