கோவை;உயரம் அதிகமாகும் வகையில், கோவையில் சீரமைக்கப்பட்ட ரோடு, 'தினமலர்' செய்தியின் விளைவாக, மேடாக போடப்பட்ட ரோடு மீண்டும் தோண்டப்பட்டு, சீரமைக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும், ரோடுகள் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் ரோடுகளில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளும்போது, பழைய ரோட்டைப் பெயர்த்து எடுத்து, 'மில்லிங்' செய்த பின்பே, ரோடு போட வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சமீபகாலமாக அனைத்து ரோடுகளிலும், 'மில்லிங்' செய்யப்படுகிறது.இப்படிச் செய்யாமல் அவசர கதியில் போடப்பட்ட ரோடுகளை ஆய்வு செய்து, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அபராதம் விதித்து வருகிறார். ஆனால் கடந்த வாரத்தில், மாநகராட்சி 47வது வார்டில், விஸ்வநாதபுரம் பகுதியில், அவசர கதியில் 'மில்லிங்' செய்யாமல் ரோடு சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர், கோவையில் இல்லாததை அறிந்து, வேகவேகமாக இந்த ரோடு போடும் வேலை நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, ரோட்டின் உயரம் அதிகரித்து, பல வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களின் கதவுகளையே திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்குள் இருந்து வாகனங்களை வெளியே எடுக்க முடியவில்லை. இதுபற்றி, நமது நாளிதழில், 'சொந்த வீட்டில் சிறை' என்ற தலைப்பில், நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, அந்த ரோட்டைப் பெயர்த்து எடுத்து, பழைய ரோட்டின் உயரத்திலேயே இருக்கும் வகையில், சீரமைப்புப் பணியை மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.அதனால், சீரமைப்புப் பணியால், உயரம் அதிகரித்திருந்த மேடான ரோடு, நேற்று காலையிலிருந்து, மீண்டும் தோண்டி அகற்றப்பட்டது. இந்தப் பணியால், அப்பகுதி மக்கள் பெரிதும் நிம்மதியடைந்தனர். உரிய நேரத்தில், அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த பிரச்னையைக் கொண்டு சென்று தீர்வு கண்டதற்காக, 'தினமலர்' நாளிதழுக்கு தங்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.