| ADDED : ஜன 02, 2026 05:04 AM
சோ ழர்களின் ஆட்சிக் காலம், தமிழகத்தின் ஊர்ப்பெயர் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அக்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பல ஊர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே இருந்த பல பழைய ஊர்களுக்கும் 'நல்லுார்' என்ற பெருமைமிக்க பெயர் சூட்டப்பட்டது. அலங்காநல்லுார், வாசுதேவநல்லுார், சமயநல்லுார் என, தமிழகம் முழுவதும் பரவிய இந்த மரபு, கொங்கு நாட்டிலும் சிங்காநல்லுார், பெருமாநல்லுார், அதிராசராசநல்லுார், அரியபிராட்டிநல்லுார், முடித்தலை கொண்ட நல்லுார் போன்ற ஊர்களை உருவாக்கியது. 'நல்லுார்' என அழைக்கப்பட்ட ஊர்கள் சாதாரண குடியிருப்புகள் அல்ல. அவை அந்தந்த ஊரின் கோவிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலங்களும் வருமானங்களும் கொண்ட சிறப்பிடங்கள். இவ்வரிசையில், கொங்கு நாட்டின் வரலாற்றுச் செம்மையை வெளிப்படுத்தும் முக்கியமான ஊர் தான் முடித்தலை கொண்ட நல்லுார். இவ்வூரைச் சுற்றியிருந்த சில சிற்றுார்கள், சங்ககாலப் புலவர் ஒருவரின் கவிதைக்குப் பரிசாக வழங்கப்பட்டன என்பது, வரலாற்று ஆச்சரியம். அந்தப் புலவர் குமட்டூர் கண்ணனார். 1800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை எரித்த கண்ணகியின் வீரத்தைப் போற்றி அவளுக்குச் சிலை வைத்தவன் சேரமன்னன் செங்குட்டுவன். அவனது தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இமயவரம்பன், தன் தம்பியை அனுப்பி கொங்குநாட்டின் சில பகுதிகளை கைப்பற்றினான். அந்தப் பகுதிகள் மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலப்பகுதிகளாக இருந்தன. வெற்றியின் சிறப்பை போற்றும் வகையில், சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து மூன்றாவது பத்துப் பதிகத்தில், குமட்டூர் கண்ணனார் பாடினார். அப்பாடலால் மகிழ்ந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தாம் கைப்பற்றிய ஊர்களில் சிலவற்றை அப்புலவருக்கே தானமாக அளித்தான். அந்த ஊர்கள் பொழில்வாய்ச்சிக்கு (இன்றைய பொள்ளாச்சி) அருகில் அமைந்திருந்தன. காலப்போக்கில், 11ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் கொங்குச் சோழர்கள் அந்தப் பகுதிக்கு 'முடித்தலை கொண்ட நல்லுார்' என்ற புதிய பெயரை வைத்தனர்.