உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ‛பனங்காட்டு ஆஸ்பத்திரி குளத்தின் மவுனமான வரலாறு

 ‛பனங்காட்டு ஆஸ்பத்திரி குளத்தின் மவுனமான வரலாறு

கோ வை நகரத்தை இரண்டாகப் பிரித்து, தெற்கு வடக்காய் ஓடும் கோவை-மேட்டுப்பாளையம் ரயில்பாதை, இன்று நம்முடைய நகர வாழ்வின் இயல்பான ஓர் பகுதியாகி விட்டது. அதன் மீது உயர்ந்து நிற்கும் இரண்டு மேம்பாலங்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களை தினம் தாங்கி நம் நகரின் இரு பக்கங்களையும் இணைத்து வைத்திருக்கின்றன. ஆனால், இந்த மேம்பாலங்களுக்கு நடுவே உள்ள பள்ளமான இடங்கள் மழைக்காலங்களில் குளங்களாக மாறும்போது, கோவையின் ஒரு பக்கம் மற்ற பக்கத்தை அணுக முடியாமல் நிற்கும் அவலத்தை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அந்த நீர் தேங்குதலின் பின்னால் மறைந்திருப்பது, ஒருகாலத்தில் உயிர்த்துடிப்புடன் இருந்த ஒரு நீர்நிலையின் வரலாறு, பனங்காட்டுக் குளம். இன்று, காளீஸ்வரா மில் மற்றும் கிக்கானி பள்ளி அருகே உள்ள பள்ளப்பகுதிகள், ஒருகாலத்தில் பனங்காட்டுக் குளத்தின் ஓரங்களாக இருந்தவை. முருகன் தியேட்டர் மேம்பாலம் முதல் சிந்தாமணி வரை பரந்திருந்த இந்த குளமும், அதன் மேற்கில் இருந்த முத்தண்ணன் குளமும் மழைநீரை சேகரித்து கிராமங்களுக்கு உயிர்நாடியாக இருந்தன. அக்காலத்தில், கொங்கு நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் குளங்கள் மக்கள் வாழ்வின் மையமாக இருந்தன. கால்நடைகள் குடிக்கும் நீராகவும், மழைநீர் சேமிப்பாகவும், கிணறுகளுக்கு ஊற்றங்காலாகவும் இருந்திருக்கின்றன. ஆனால் நகரம் வளர, குளங்கள் படிப்படியாக மறைந்து போகத் தொடங்கின. முத்தண்ணன் குளத்தின் ஒரு பகுதி காந்திபார்க் ஆனது. பனங்காட்டுக் குளம் முதலில் கரை அகற்றப்பட்டு, பின், துார்த்தப்பட்டு பனைமரங்கள் வளர்க்கப்பட்டன. சில ஆண்டுகளில் அந்த பகுதி அடர்ந்த பனைக்காடாக மாறி, சிறு உயிரினங்கள் வாழும் வனாந்திரமாக இருந்தது. மக்கள் பகலில்தான் அங்கு செல்ல தைரியப்படுவார்கள். கடந்த 1906ம் ஆண்டு மேட்டுப்பாளையம் ரயில்பாதை, குளத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டதும் மக்கள் அங்கு பகல் வேளைகளில் நடமாடத் துவங்கினர். பின், மக்கள் குடியேறத் தொடங்க, பனங்காட்டு பகுதி நகரத்துடன் இணைந்தது. நகரம் வளர்ந்தபோது, நகரசபை அங்கிருந்த மரங்களை வெட்டி, நிலத்தை விற்பனை செய்தது. இன்று காளீஸ்வரா மில், சோமசுந்தரா மில், ஒருகாலத்தில் இருந்த ஸ்ரீனிவாசா தியேட்டர், புருக்பாண்ட் கம்பெனி, தேவாங்கர் பள்ளி இவை எல்லாம் ஒருகாலத்தில் பனங்காட்டுக் குளத்தின் நடுப்பகுதியில் நிற்கும் நினைவுச் சின்னங்கள். பனங்காட்டு என்ற பெயர் காலப்போக்கில் 'காட்டூர்' என சுருங்கி விட்டாலும் அதன் சுவடு இன்னும் வாழ்கிறது. சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையை இன்றும் பலர் 'பனங்காட்டு ஆஸ்பத்திரி' என்று அழைப்பது, ஒருகாலத்தில் கோவையின் இதயத்தை ஈரமாக வைத்திருந்த அந்த குளத்தின் மவுனமான வரலாற்றை நினைவூட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை