கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பணிச்சுமை அதிகம் இருப்பதாகவும், அடிப்படை பணியாளர்களுக்கு எவ்வித மரியாதையும் அளிப்பதில்லை என, பல்வேறு புகார்களை முன்வைத்து அடிப்படை பணியாளர்கள் நேற்று, தர்ணாவில் ஈடுபட்டனர். கிரிஸ்டல் தனியார் நிறுவனத்தின் கீழ், ஒப்பந்த முறையில், துாய்மை பணி, அலுவலக உதவியாளர் உட்பட, 600 பேர் கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். துாய்மை பணிகள், நோயாளிகளுக்கு உதவி, செக்யூரிட்டி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இவர்கள் பணிபுரிகின்றனர். நேற்று பணியாளர்கள் காலை முதல் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். பணியாளர்கள் சிலர் கூறுகையில், 'வாரம், மாத விடுமுறை என்பதே இல்லை. கொத்தடிமைகள் போல் தொடர் பணிகள் வழங்கப்படுகிறது. மருத்துவமனை சாலையில் நோயாளிகளை தள்ளி செல்வதும், ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இடத்தை பராமரிப்பு என அனைத்து கடும் சிரமத்தில் மேற்கொள்கின்றோம். ரூ.22 ஆயிரமாக இருந்த ஊதியம் காரணமின்றி, 16-18 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது. இதை கேட்க யாரும் இல்லை; ஊதியமும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. பி.எப்., பதிவு எண்கள் கூட வழங்கப்படுதில்லை. கேள்விகள் கேட்டாலோ, போராட்டம் செய்தாலோ மிரட்டுகின்றனர்' என்றனர். டீன் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, ''சரியான நேரத்திற்கு பணிக்கு வரவேண்டும், பணி நேரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பணியில் இருக்க வேண்டும் உள்ளிட்ட சில விதிமுறைகள் கண்காணிக்கப்படுகிறது. தவிர, லஞ்சம் போன்ற புகார்கள் பெறப்பட்டதால், ஒரு சிலர் மீது சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால், கேள்வி கேட்பது, கட்டுப்பாடுகள் விதிப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. பணியாளர்களின் நியாயமான குறைபாடுகள் அனைத்தும் களைய நடவடிக்கை எடுக்கப்படும். பி.எப்., குறித்து கிரிஸ்டல் தலைமை மேலாளரிடம் பேசியுள்ளோம், '' என்றார்.
குறைகளை சரி செய்ய உறுதி
மாநில துாய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி கூறியதாவது: அரசு மருத்துவமனை துாய்மை பணியாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அவர்களுடன், நானும், நலவாரிய துணைத்தலைவர் கனிமொழி பத்மநாபன் இருவரும், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பி.எப்., இ.எஸ்.ஐ., சம்பள குறைப்பு போன்றவை தெளிவாக இல்லை, முக்கிய குறைபாடுகளை சுகாதார அமைச்சர் வாயிலாக, முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று, தீர்வு ஏற்படுத்த முயற்சி செய்வோம். துாய்மை பணியாளர்களிடம் நலவாரிய அட்டை இல்லை என்பது அறிந்து, உடனடியாக பெற அறிவுறுத்தியுள்ளோம். தனியார் ஒப்பந்ததாரர்கள் குறைபாடுகளை சரிசெய்து கொடுப்போம் என உறுதியளித்துள்ளனர். துாய்மை பணியாளர்களை மரியாதைக்குறைவாக நடத்தினால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.