நேர்வழியில் வாழ்வோரே உயர்ந்து நிற்பர்: தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
கோவில்பாளையம் : 'நேர்வழியில் வாழ்வோரே, உயர்ந்து நிற்பார்கள்' என தமிழ்ச் சங்க விழாவில் பணி நிறைவு பெற்ற கல்லுாரி முதல்வர் பேசினார். கவையன்புத்துார் தமிழ் சங்கத்தின் சார்பில், நுால் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா, ஆசிரியர் தின விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா எஸ்.எஸ்.குளம் விவேகானந்தா மேலாண்மை கல்லுாரியில் நடந்தது. உதவி பேராசிரியர் கணேசன் வரவேற்றார்.சென்னை, நந்தனம், அரசு கலைக்கல்லுாரி (பணி நிறைவு) முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்து பேசுகையில்,'' இறைவனின் உண்மை புகழை அறிந்து வாழ்வோருக்கு, பாவம், புண்ணியம் என்னும் இரு வினைகளும் இல்லை. நேர்வழியில் நேர்த்தியுடன் வாழ்பவர்களே உயர்ந்து நிற்கின்றார்கள். உழைப்பால் வரும் பொருளே உறுதியாய் நம்மிடம் தங்கும். மற்றவை கரைந்து சென்று விடும்,'' என்றார்.புலவர் ராமலிங்கம், தர்மலிங்கம், தெய்வசிகாமணி ஆகியோர் பேசினர்பண்பாட்டு உயர்வுக்கு பக்கபலமாய் இருப்பது தாய் மொழியே என்றும் தகவல் தொழில்நுட்பமே என்றும் பட்டிமன்றம் நடந்தது. எழுத்தாளர் சண்முகம் எழுதிய 'ஒரு சாமானியனின் வரலாறு' என்கிற நுாலை பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெகநாதன் வெளியிட, தலைமையாசிரியர் கந்தசாமி, தர்மலிங்கம், முத்துசாமி, விஜயகுமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.சிறப்பாக பணிபுரிந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ் சங்கம் சார்பில் விருதுகள் வழங்கி கவுரவித்தனர்.