| ADDED : ஜன 04, 2024 09:04 PM
வால்பாறை:மாணவர்களே இல்லாத பள்ளி மூடப்பட்ட நிலையில், அங்கு பணிபுரிந்த ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.வால்பாறை தாலுகாவில், 69 துவக்கப்பள்ளி, 14 நடுநிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம், 92 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், போதிய மாணவர்கள் இல்லாத நிலையில், கடந்த ஆண்டு சின்னக்கல்லார் ஆரம்பப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் இல்லாததால், நடப்பாண்டு தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த எஸ்டேட்டில் வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுவதால், தொழிலாளர்கள் தொடர்ந்து எஸ்டேட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் கூறுகையில், ''மானாம்பள்ளி பள்ளியில் படித்த, வெளிமாநிலத்தை சேர்ந்த 4 மாணவர்கள், அவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால், இந்தப்பள்ளி தற்காலிமாக மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்த தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.