கோவை:மத்திய அரசிடம் இருந்து 'மெட்ரோ ரயில்' திட்ட அறிக்கை திரும்பி வந்ததால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் அனுமதி பெற்று, கோவை அவிநாசி ரோட்டில் ஐந்து இடங்களில் சுரங்க நடைபாதை, காந்திபுரம் பாலத்தில் இறங்கு தளங்கள், சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்டுவதற்கான முயற்சிகளில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கோவை, அவிநாசி ரோட் டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இவ்வழித்தடத்தில் சாலையை பொதுமக்கள் சிரமமின்றி கடக்க, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை, ஜி.ஆர்.ஜி., பள்ளி, பி.எஸ்.ஜி., கல்லுாரி மற்றும் லட்சுமி மில் சந்திப்பு ஆகிய ஐந்து பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதே வழித்தடத்தில், 'மெட்ரோ ரயில்' இயக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது; அதிலும், சுரங்க நடைபாதை வருகிறது என கூறி, மாநில நெடுஞ்சாலைத்துறையால் திட்டமிடப்பட்ட சுரங்க நடைபாதை அமைக்கப்படவில்லை. இதேபோல், கோவை - சத்தி ரோட்டில் அம்மன் கோவிலில் துவங்கி, சரவணம்பட்டி வரை, 1,415 மீட்டர் துாரத்துக்கு ரூ.80.48 கோடியில், 31 துாண்களுடன், தலா, 7.5 மீட்டர் அகலத்துடன், நான்கு வழி மேம்பாலம் கட்டுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. 'மெட்ரோ ரயில்' திட்ட அறிக்கையில், சத்தி ரோடும் சேர்க்கப்பட்டு இருந்ததால், இப்பாலமும் கட்டப்படாமல் நிறுத்தப்பட்டது. காந்திபுரம் நஞ்சப்பா ரோடு பாலத்தில் கணபதியில் இருந்து வருவோர் கிராஸ்கட் ரோடு சந்திப்பு செல்ல இறங்கு தளம், பார்க் கேட்டில் இருந்து பாலத்தில் செல்வோர் நுாறடி ரோட்டுக்குச் செல்ல இறங்கு தளம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணியும் மெட்ரோ ரயிலை காரணம் காட்டி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத திட்டம் என்கிற கருத்துடன், மாற்றுத்திட்டங்களை பரிசீலிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசு தரப்பில் மீண்டும் அழுத்தம் கொடுத்தாலும், நிலம் கையகப்படுத்தி, மெட்ரோ ரயில் செயல்பாட்டுக்கு வர 10 ஆண்டுகளுக்கு மேலாகும். அதனால், அவிநாசி ரோட்டில் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு சுரங்க நடைபாதை, சரவணம்பட்டியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க மேம்பாலம், காந்திபுரத்தில் சாலை மார்க்கமாக செல்லும் வாகன போக்குவரத்தை குறைத்து மேம்பாலத்தை பயன்படுத்த இரு இடங்களில் இறங்கு தளங்கள் அமைக்க வேண்டியது அவசியம். இம்மூன்று திட்டங்களும் கட்டாயத் தேவை என்பதாலும், மெட்ரோ ரயில் திட்டம் இனி தடையாக குறுக்கே இருக்காது என்பதாலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தடையின்மை சான்று பெற்று, இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது. கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: மெட்ரோ ரயில் கட்ட திட்டமிடும் சுரங்கப்பாதையை ரயில் பயணிகளை தவிர மற்றவர்கள் பயன் படுத்த முடியாது. ஏற்கனவே திட்டமிட்ட சுரங்கப்பாதை பணியை செய்யாமல் தவிர்க்க, மெட்ரோ மீது நெடுஞ்சாலைத்துறையினர் காரணம் கூறுகின்றனர். உக்கடம் மேம்பாலம், திருச்சி ரோடு மேம்பாலம், அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்ட வேண்டாம்; இவ்வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது என மெட்ரோ நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது. இன்றைய அவசிய தேவையை குறிப்பிட்டு, நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலங்கள் கட்டினர். அதேபோல், சுரங்க நடைபாதை, காந்திபுரம் பாலத்தில் இறங்கு தளங்கள், சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்ட வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.
'ஆலோசிக்கப்படும்'
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை திரும்பி வந்திருப்பது குறித்தும், திருத்திய அறிக்கை மீண்டும் அனுப்பி வைக்கப்படுமா என்பது குறித்தும், அவ்வழித்தடத்தில் வேறு பணிகள் செய்யலாமா என்பது தொடர்பாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அதில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்பர். அப்போது, என்னென்ன திட்டங்கள் அவசியம் என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்' என்றனர்.