கோவை: கழிவு பஞ்சு விலை குறையாததால் கையிருப்பில் உள்ள பஞ்சை வைத்து இயக்குவது; வாரம் இருமுறை மில்களுக்கு விடுமுறை விடுவது என ஓ.இ., மில்கள் அறிவித்துள்ளன. மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் கூறியதாவது: ஓப்பன் எண்ட் (ஓ.இ.,) மில்களில், சலவை, கலர், மிலான்ஜ், காட்டன், பாலியெஸ்டர், விஸ்கோஸ் காட்டன், விஸ்கோஸ் பாலியெஸ்டர் என 2 முதல் 40 கவுன்ட் வரையிலான நூல்களை உற்பத்தி செய்கிறோம். விசைத்தறி காடா துணிகளை ஜெட்பூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநில நகரங்களுக்கு அனுப்புவது வழக்கம். அங்கிருந்து தீபாவளிக்குப் பின் பணம் வரவில்லை. துணிகள் தேங்கி விட்டன. தொடர் விலை சரிவு ஏற்படும் என அஞ்சுகிறோம். இச்சூழலில், கடந்த அக்., முதல் பருத்தி சீசன் துவங்கியதால் பருத்தி விலை கேண்டிக்கு ரூ. 6 ஆயிரம் வரை குறைந்தும், தமிழக ஸ்பின்னிங் மில்கள், கழிவுப் பஞ்சு விலை கிலோவுக்கு ரூ. 4 உயர்த்தியுள்ளன. கழிவுப் பஞ்சு விலைக்கு இணையாக நூல் விலையை நாங்கள் உயர்த்த முடியாது. எனவே, கடந்த மாத விலைக்கே கழிவுப் பஞ்சு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விலை குறையா விடில் நஷ்டத்தைத் தவிர்க்க, கையிருப்பில் கழிவுப்பஞ்சு உள்ளவரை மட்டும் இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை, 20,25,30 கவுன்ட் நூல்களை உற்பத்தி செய்யும் ஓ.இ., மில்களில், சோலார் வைத்துள்ளவர் கள் பகலில் இயக்குவது, மற்றவர்கள் வாரம் இரண்டு நாள் விடுமுறை விடுவது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.