தனியார் துறைகளில் விசாகா கமிட்டி: உறுதிபடுத்த கோரிக்கை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் 'விசாகா கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013ன் படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் பற்றி புகார் தெரிவிக்க, விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.இக்கமிட்டி, ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாக தயாரித்து அரசிடம் அளிக்கிறது. அதில், பெண் ஊழியரை தொட்டுப் பேசுவது, அவரை பாலியலுக்கு அழைப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசுவது, ஆபாசமான படங்களை காட்டுவது உள்ளிட்டவை, பாலியல் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.அவ்வகையில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் 'விசாகா கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது: பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படுவது கட்டாயமாகும். அதன்படி, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பல தனியார் துறைகளில் இக்கமிட்டி அமைக்கப்படவில்லை.பெண்கள் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக, அனைத்து அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் இக்கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.