வால்பாறை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, அ.தி.மு.க., சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. வால்பாறையில் அ.தி.மு.க., பூத் கமிட்டிகளுடன் எஸ்.ஐ.ஆர்., என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆலோசனைக்கூட்டம் இரு வேறு இடங்களில் நடைபெற்றன. வால்பாறை அடுத்துள்ள முடீஸ் பஜார் பகுதியில் நடந்த கூட்டத்திற்கு, ஏ.டி.பி., தோட்ட தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவர் அமீது தலைமை வகித்தார். இதே போல் வால்பாறை நகரில் நடந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க., நகர செயலாளர் மயில்கணேஷ் தலைமை வகித்தார். முடீஸ் பஜார் பகுதியில் நடந்த கூட்டத்தில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, 475 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் பணிச்சுமையை குறைத்தற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எஸ்டேட் தொழிலாளர்கள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.,பூத் கமிட்டிகளுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வால்பாறை நகர் மற்றும் முடீஸ் பகுதியில் நடந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பேசுகையில், 'வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி சரிபார்ப்பு ஆகியவற்றை உரிய முறையில் கவனமுடன் சரிபார்க்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி மலர சட்டசபை தேர்தலில் கட்சியினர் பம்பரமாக செயல்பட வேண்டும்,' என்றனர். கூட்டத்தில், சட்டசபை தேர்தல் பொறுப்பாளரும், இளைஞரணி மாவட்ட செயலாளருமான ராஜ்குமார், ஐ.டி.,விங்க் ராஜசேகர் (பெதம்பம்பட்டி), கார்த்திக் (திருப்பூர்), மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் பெருமாள், மாவட்ட பேரவை இணை செயலாளர் நரசப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.