உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாக்காளர் படிவங்களை திருப்பித்தர ஆர்வமில்லை; ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் அவதி

 வாக்காளர் படிவங்களை திருப்பித்தர ஆர்வமில்லை; ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் அவதி

கோவை: வாக்காளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களை திரும்ப பெற ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வாக்காளர் சிறப்பு திருத்த கணக்கெடுப்பு பணிகள் கடந்த 4ம் தேதி துவங்கியது. வரும் டிச. 4 ல் முடிவடைகிறது. இன்னும் ஏழு நாட்களே உள்ள சூழலில் பணிகளை, 100 சதவீதம் நிறைவடைய செய்ய வேண்டும் என்று கலெக்டர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும்அறிவுறுத்தியுள்ளார். இச்சூழலில் நேற்று முன் தினம் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையளர்கள் அடங்கிய குழு வாக்காளர்களின் வீடு தேடி செல்ல ஆட்டோக்கள் வழங்கப்பட்டது. இந்த ஆட்டோக்களில் நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று படிவங்களை பெற முயற்சித்தனர். சில வாக்காளர்கள் பூர்த்தி செய்த படிவங்களை வழங்கினர். பல வாக்காளர்கள் படிவங்களை தொலைத்துவிட்டதாக கூறியதால், நிலைய அலுவலர்கள் தங்களிடம் உள்ள கூடுதல் படிவங்களில் பூர்த்தி செய்து கையெப்பம் பெற்றுக்கொண்டனர். மேலும் சில வாக்காளர்கள் தாங்கள் வெளியூரில் இருப்பதாகவும், நாளை வருகிறேன், நாளை மறுதினம் வருகிறேன் என்று சொல்லி நாட்களை கடத்துகின்றனர். ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் படிவங்களை பெற ஒரே வீட்டிற்கு பலமுறை நடையாய் நடக்கின்றனர். இது குறித்து நிலைய அலுவலர்கள் கூறுகையில்,'' கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, 100 வார்டுகளில், 200 ஆட்டோக்கள் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களில் காலை 7 மணிக்கு பணிகளை துவக்குகிறோம், இரவு வரை பணிகளை தொடர்கிறோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நுாறு சதவீதம் நிறைவு செய்ய முயற்சிக்கிறோம். அதற்கு வாக்காளர்கள் ஒத்துழைப்பதில்லை. அதனால் தான் பணிகளை நிறைவடையாமல் உள்ளது,'' என்றனர்.

வாக்காளர் பட்டியல் பணி புறக்கணிப்பு

தாசில்தார் இருவருக்கு நோட்டீஸ்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிக்கு செல்லாமல் விடுப்பில் சென்ற இரு தாசில்தார்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் கடந்த நவ., 4 அன்று துவங்கியது, தேர்தல் பணிகள் துவங்கிய நிலையில் சிலர் விடுப்பில் சென்றனர். பணிக்கு திரும்பாதவர்கள் பட்டியலை தயார் செய்ய கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டிருந்தார். தாசில்தார் பேபிபாலா, சரண்யா ஆகிய இருவரும் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளை புறக்கணித்ததோடு உயர் அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் மருத்துவ விடுப்பில் சென்றதாக தெரியவந்தது. இவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இருவரும் மாவட்ட வருவாய் அலுவலர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில்,'' அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் எவ்வளவு பேர் சிக்குவார்கள் என்று தெரியவில்லை,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை