உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்

முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்

--நிருபர்கள் குழு- கந்த சஷ்டி விழாவையொட்டி, முருகன் கோவில்களில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காரமடை அடுத்த குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில்,சூரசம்ஹாரம் விழா, கடந்த, 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. நேற்று முன் தினம் மாலை, 5:00 மணிக்கு சூரசம்ஹார விழா நடைபெற்றது. நேற்று, திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. கணபதி பூஜை, கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், திரிசதி ஹோமம் உள்ளிட்டவை நடந்து ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத குழந்தை வேலாயுத சுவாமி உற்சவமூர்த்திக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குருந்தமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகனபிரியா, அறங்காவலர் உறுப்பினர்கள், செயல் அலுவலர் வனிதா, மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். -----சூலுார் வைத்தீஸ்வரன் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், காங்கயம் பாளையம், பொன்னாண்டாம்பாளையம், செங்கத்துறை சென்னியாண்டவர் கோவில், சூலுார் ஜீவா நகர் செந்தில் ஆண்டவர், மயூரநாதர் கோவில், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் கடந்த ஆறு நாட்களாக கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார விழா நடந்தது. திருக்கல்யாண உற்சவ விழா நேற்று அனைத்து கோவில்களிலும் நடந்தது. கிட்டாம்பாளையம் பழனியாண்டவர் கோவிலில் காலை, 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் திருக்கால்யாண உற்சவ விழா துவங்கியது. 11:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் திருவீதி உலா நடந்தது. செங்கத்துறை சென்னியாண்டவர் கோவிலில் முதலாமாண்டு கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு கல்யாண உற்சவம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அன்னுார் சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில், 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை, தினமும் வேள்வி பூஜை, மூல மந்திர அர்ச்சனை நடந்தது. நேற்று மதியம் 12:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், பேரொளி வழிபாடும் நடந்தது. வள்ளி தெய்வானை சமேதரராக முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கி 9:00 மணி வரை வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. மதியம் மயில்வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் உள்ள மருதமலை சுப்ரமணியசாமி கோவிலில் முதலாம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலை வேள்வி பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் சூரசம்காரம் நடந்தது. நேற்று காலையில் முருகனுக்கு 12ம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 11:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மஞ்சள் நீராட்டும் மறுபூஜையும் நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இடிகரை வேதநாயகி உடனமர் வில்லீஸ்வரமுடையார் கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா நடந்தது. நேற்று காலை, 9.00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம், மாலை வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஜோதிபுரம் ஜோதி பாலமுருகன் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை