மேட்டுப்பாளையம்: கேரளாவில் ஆக்ரா உருளைக்கிழங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளில், ஆக்ரா உருளைக்கிழங்கு விற்பனை களைகட்டியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில், 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இங்கு ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஈரோடு மாவட்டம் திம்பம், தாளவாடி, கேர்மாளம், கர்நாடகா மாநிலம் உடையர்பாளையம், சாம்ராஜ் நகர், குஜராத், இந்தூர், உத்திரபிரதேசத்தில் இருந்து ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் இருந்து உருளைக்கிழங்குகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதில் 50 சதவீதம், கேரளா மாநிலத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு ஆக்ரா உருளைக்கிழங்குகள் அதிகம் வருகின்றன. கேரளாவில் ஆக்ரா உருளைக்கிழங்குகள் விற்பனை சூடுபிடித்துள்ளதால், கேரளா வியாபாரிகள் ஆக்ரா உருளைக்கிழங்குகளை அதிகம் வாங்குகின்றனர். இதுகுறித்து, தனியார் உருளைக்கிழங்கு மண்டி உரிமையாளர் பாபு கூறியதாவது:- தற்போது, மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து உருளைக்கிழங்குகள் வருகின்றன. இந்தூர், திம்பம், கோலார் உள்ளிட்ட இடங்களில் இருந்து கிழங்குகள் வரத்து குறைந்துவிட்டன. ஆக்ரா கிழங்குகளின் விலை, 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.700 முதல் ரூ.900 வரை விற்பனையாகிறது. தினமும் 20 லாரிகளில் மேட்டுப்பாளையத்திற்கு வருகிறது. தினமும் 600 டன் வரை வருகின்றன. கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஊட்டி உருளைக்கிழங்குகள் தான் அதிகம் விற்பனை ஆகும். ஆனால் தற்போது அங்கு வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பணி புரிவதால், வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய ஆக்ரா, குஜராத், இந்தூர் உருளைக்கிழங்குகள் தான் அதிகம் விற்பனை ஆகின்றன. அங்குள்ள கடைகளில் முதலில் விற்பனை ஆவது வடமாநில உருளைக்கிழங்குகள் தான். இவ்வாறு அவர் கூறினார்.-