இரண்டு வயதே ஆன சிறுவன் சாய்சித்தார்த், நாடுகள், கண்டங்கள், கொடிகள் என பல விஷயங்களை நினைவில் வைத்திருப்பதற்காக, கின்னஸ் சாதனை சான்றிதழ் பெற்றுள்ளார்.கணபதியை சேர்ந்த மணிகண்டன் - ராஜலட்சுமி தம்பதியின் மகன் சாய் சித்தார்த். இந்திய மாநிலங்கள், கண்டங்கள், உலக அதிசயங்கள் சொன்னால், அதை வரைபடத்தில் காண்பிக்கிறான்.நாடுகளின் பெயரை கூறினால், அதன் கொடியை காட்டுதல், வண்ணங்கள், எண்கள், பறவைகள், விலங்குகளை கூறுதல் என, பல பொது அறிவு விஷயங்களில் தனித்திறனை வெளிப்படுத்துகிறார்.சிறுவனின் அம்மா ராஜலட்சுமி கூறுகையில், ''என் கணவரின் அறையில், உலக வரைப்படங்கள் இருக்கும். ஒருமுறை அதை எடுத்து வைத்து சொல்லிக் கொடுத்திருக்கிறார்.பின் திடீரென ஒருநாள், அந்த வரைபடத்தை காட்டி கேட்டபோது, சரியாக அடையாளம் காட்டியுள்ளான் சாய் சித்தார்த்.இதனால், விளையாட்டாக பல விஷயங்களை கற்று தருகிறோம். இவனது ஞாபகத்திறனை, கின்னஸ் சாதனைக்கு பதிவு செய்து, சான்றிதழ் பெற்றுள்ளோம். இதுதவிர, 10க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளான்,'' என்றனர்.பேசிக்கொண்டிருக்கும் போது, சார்ட்டில் உள்ள படங்களை பார்த்து, ஆப்பிள், ஆரஞ்ச் என சிரித்துக்கொண்டே மழலை மொழியில் கொஞ்சினார் சாய்சித்தார்த்.