| ADDED : டிச 01, 2025 04:58 AM
வால்பாறை: சோலையாறு அணை பகுதியில் பணி நிறைவடைந்தும் பூங்கா பயன்பாட்டிற்கு வராததால், சுற்றுலா பயணியர் கவலையடைந்துள்ளனர். தமிழக -- கேரள எல்லைப் பகுதியில் சோலையாறு அணை உள்ளது. பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான இந்த அணை, ஆண்டு தோறும் பருவமழையின் போது நிரம்பி வழிகிறது. இந்நிலையில், சோலையாறு அணையை கண்டு ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணியர் பொழுதுபோக்கு வசதிக்காக பொதுப்பணித்துறை சார்பில், அணையை ஒட்டியுள்ள பகுதியில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன முறையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பணி நிறைவடைந்து ஆறு மாதத்திற்கு மேலாகியும், பூங்கா மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படவில்லை. சுற்றுலா பயணியர் கூறியதாவது: மாநில எல்லையில் சோலையாறு அணை அமைந்துள்ளதால், கேரளாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணியர் பூங்கா திறக்கப்படாமல் உள்ளதால் ஏமாற்றமடைகின்றனர். எனவே, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக சோலையாறு அணையில் கட்டி முடிக்கப்பட்ட பூங்காவை திறக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். பொதுபணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சோலையாறு அணைப்பகுதியில் கடந்த, 2023ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இடையிடையே கனமழை பெய்ததால், பணி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பூங்கா அமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக திறக்கப்படாமல் உள்ளது. விரைவில், சுற்றுலா பயணியர் கோரிக்கையை ஏற்று பூங்கா திறக்கப்படும். இவ்வாறு, கூறினர்.