| ADDED : நவ 20, 2025 04:28 AM
கோவை: கோவையில் சத்தி ரோடு, எந்நேரமும் வாகன போக்குவரத்து காணப்படும். கனரக வாகனங்களும் அதிகமாக செல்கின்றன. டெக்ஸ்டூல் பாலத்தை கடந்ததும், கணபதி பஸ் ஸ்டாப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதை கடந்ததும் சூர்யா மருத்துவமனை திருப்பத்தில், வாகனங்கள் கடந்து செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. அடுத்த கட்டமாக ராமகிருஷ்ணாபுரம் சந்திப்பு. இது, சத்தி ரோடும், விளாங்குறிச்சி ரோடும் இணையும் பகுதி. கோவை நகர் பகுதியில் இருந்து சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, அன்னுார் நோக்கிச் செல்லும் வாகனங்கள், இதேபோல் எதிர் திசையில் வரும் வாகனங்கள், விளாங்குறிச்சி ரோட்டில் வரும் வாகனங்கள், இச்சந்திப்பில் இணைகின்றன. பீக் ஹவர்ஸில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் இஷ்டத்துக்கு வாகனங்களை இயக்குகின்றனர். அதனால், விபத்து ஏற்படுகிறது. ஒருவரை ஒருவர் முந்த முயற்சிக்கும் வாகன ஓட்டிகளுக்குள், அடிக்கடி தகராறும் நடக்கிறது. இச்சந்திப்பை மேம்படுத்த மாநகராட்சி முன்வந்துள்ளது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார். ரோட்டோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. அப்பகுதியில் இருந்த கோயிலும் இடிக்கப்பட்டது. அவ்விடம் சமப்படுத்தப்பட்டு, 'வெட்மிக்ஸ்' கொட்டப்பட்டிருக்கிறது. மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்து, வடிவமைப்பு செய்து, ஒப்புதல் கொடுத்தனர். ஆனால், இன்னும் 'ரவுண்டானா' அமைக்கப்படாததால், தற்போது சிக்னல் நடைமுறை இருக்கிறது. சிக்னல் பயன்பாட்டில் இருக்கும் சமயத்தில், ரோட்டின் எதிர்திசையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கின்றனர். இரவு நேரங்கள் மற்றும் பீக் ஹவர்ஸ் மற்றும் விசேஷ நாட்களில் வாகனங்கள் தேங்குவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற வேண்டுமென காத்திருக்காமல், இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கை, வாகன ஓட்டுனர்கள் வைத்துள்ளனர்.