பொள்ளாச்சி: ஆழியார் அணை சுற்றுப்பகுதியில், ஆபத்து நிறைந்த இடங்களில், சுற்றுலா பயணியரின் அத்துமீறலை கண்டறிந்து தடுக்க, கண்கணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை, கவியருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், அதிகப்படியான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதி, ஆபத்தான நீர்நிலை பகுதிகளுக்கு செல்ல தடையும் உள்ளது. தடுப்பணைக்கு சென்று, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கும் பொருட்டு, பொதுப்பணித்துறையினர் கம்பி வேலியும் அமைத்துள்ளனர். ஆனால், போலீசார் மற்றும் பொதுப்பணித் துறையினர் கண்காணிப்பு இல்லாதபோது, சுற்றுலா பயணியர் சிலர், சாகசம் என்ற பெயரில், கம்பி வேலியையும் பொருட்படுத்தாமல் அதனை தாண்டிச் செல்கின்றனர். துறை ரீதியான அதிகாரிகள் இதை கண்காணிக்க முடிவதில்லை. எனவே, ஆழியாறு சுற்றுப்பகுதியில், ஆபத்து நிறைந்த இடங்களில், விழிப்புணர்வு எச்சரிக்கை பலகை வைப்பதுடன், சோலார் வாயிலாக இயங்கும் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் கூறியதாவது: சிறார்கள் பலர், ரீல்ஸ் மோகத்தில் அணைப்பகுதியில் வீடியோ எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சாகசம், தண்ணீரின் நடுவே நின்று கொண்டு சாகசம் செய்ய முற்படுவது என, அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. போலீசாரை கண்டால், அங்கிருந்து விலகிச் செல்கின்றனர். ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, தடுப்பணை, அணை கரையோரம் என, ஆபத்தான இடங்களில் சோலார் உதவியுடன் இயங்கும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். ஓரிடத்தில் இருந்து, அத்துமீறலை கண்டறிந்து ஒலிப்பெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், சுற்றுலாப் பயணியரின் அத்துமீறலை தடுக்க முடியும். இவ்வாறு, கூறினர்.