கோவை:உரிய கண்காணிப்பு, கடுமையான அபராதம் இல்லாததால், கோவை மாநகரில் கடந்தாண்டு, 10 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மாநகர போலீஸ் கமிஷனர் மூவரும் இணைந்தால், இப்பிரச்னைக்கு நிரந்தர முடிவு காணலாம்; கோவையை காப்பாற்றலாம்.கோவை மாநகராட்சியில் தினமும் சேகரமாகும், 1,250 டன் வரையிலான குப்பையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களே அதிகம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் இப்பொருட்களை தடுக்க, மாநகராட்சி சுகாதார பிரிவினர் அடிக்கடி சோதனைகள் நடத்தி வருகின்றனர்.அதன்படி, கடந்தாண்டு ஜன., முதல் டிச., வரை, 14 ஆயிரத்து 151 கடைகளில் சோதனை நடத்தி, 10 ஆயிரத்து, 957 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்துள்ளனர். ரூ.24 லட்சத்து, 57 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.ஐந்து மண்டலங்களில் அதிகபட்சமாக, மத்திய மண்டலத்தில், 3,112 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடுப்பு குழுவினர் மட்டும், 6,805 கிலோ பறிமுதல் செய்து ரூ.13 லட்சத்து, 6,700 அபராதம் வசூலித்துள்ளனர்.கடந்த, 2022 ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், கோவையில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதற்கு, கடும் தண்டனை இல்லாததே காரணம்.அதாவது, தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல், பகிர்ந்தளித்தல் என்பது குற்றத்துக்குரியது.சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு ரூ.100 முதல் பெரிய வணிக நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் வரை, அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட சிறு நிறுவனங்களில் மட்டுமே, அபராத நடவடிக்கை தொடர்கிறது.பெரிய நிறுவனங்களில் பெயரளவுக்கு மட்டுமே நடவடிக்கை உள்ளது. இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படாத நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து சர்வ சாதாரணமாக கோவைக்குள் கடத்தி வரப்படுவதாக, வியாபாரிகளே தெரிவிக்கின்றனர்.கோவை நகரின் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை, திறம்பட செயல்படுத்தி வரும் மாநகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் மூவரும் இணைந்தால், இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம்.இணைவார்களா?
அபராதம் போதாது
சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கடத்தி வரப்பட்டு, கடைகளுக்கு 'டெலிவரி' செய்யப்படுகிறது. நம் மாநிலத்தையொட்டிய சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரமாக இல்லாதது, முக்கிய காரணம். லட்சக்கணக்கில் அபராதம், 'சீல்' வைப்பு போன்ற கடும் நடவடிக்கைகள் எடுத்தால், விதிமீறுவோருக்கு பயம் வரும்; பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுத்தி விடலாம்' என்றனர்.