| ADDED : ஜன 09, 2024 12:46 AM
கோவை;விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட பெண்ணுக்கு, இழப்பீடு தராமல் இழுத்தடிப்பதால் அரசு ஜப்தி செய்யப்பட்டது. கோவை, காளப்பட்டி, பெரியார் நகரை சேர்ந்த மீனாட்சி,39, 2015, அக்., 31ல், மதுரை- கோவைக்கு அரசு பஸ்சில் பயணித்த போது, மற்றொரு பஸ் மோதியது.முன் சீட்டில் அமர்ந்திருந்த மீனாட்சியின் வலது காலில், முறிவு ஏற்பட்டு செயல் இழந்தது. இதனால் முழங்காலுக்கு கீழ் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இழப்பீடு கோரி, கோவை எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ரூ.25.4 லட்சம் வழங்க, 2019ல் உத்தரவிடப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் இழுத்தடிப்பு செய்ததால், இழப்பீடு தொகை வட்டியுடன் சேர்த்து, 32.4 லட்சம் ரூபாயாக அதிகரித்தது. ழுழு இழப்பீடு கொடுக்காமல் பகுதி தொகை மட்டும் கொடுத்தனர். ஒன்பது லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது. இதனால் அவரது தரப்பு வக்கீல் அகஸ்டஸ், நிறைவேற்று மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, அரசு டவுன் பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டு, கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.