| ADDED : மே 12, 2024 04:36 AM
பண்ருட்டி: பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் கி.பி., 15ம் நுாற்றாண்டை சேர்ந்த செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு மற்றும் தளவானூர் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, பழங்காலத்தை சேர்ந்த இரண்டு செப்பு நாணயங்களை கண்டெடுத்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:உளுந்தாம்பட்டு, தளவானுார் தென்பெண்ணையாற்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு செப்பு நாணயங்கள் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தை சேர்ந்தவை. கி.பி., 15ம் நுாற்றாண்டை சேர்ந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் காளையின் உருவம், மற்றொரு பக்கத்தில் தெலுங்கு எழுத்தில் தேவராயர் என்று பொறிக்கப்பட்டுள்ளது. தென் பெண்ணையாற்று படுகையில் ஏற்கனவே செப்பு நாணயங்கள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சங்க காலம் முதல் விஜயநகர பேரரசு வரை மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.