பண்ருட்டி:கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் அஞ்சாபுலி, 40, விவசாய கூலி தொழிலாளி. இவர், தன் உறவினர்களான சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கஜேந்திரன் மனைவி கவுரி, 56, கண்ணதாசன் மனைவி லல்லி, 55, சிவானந்தம் மனைவி பரமேஸ்வரி, 65, பண்ருட்டி திருவள்ளுவர் நகர் ராமச்சந்திரன், 63, அவரது மனைவி நிலவழகி, 45, ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, பண்ருட்டியில் இருந்து ஆட்டோவில் முத்தாண்டிகுப்பத்தில் உள்ள கருப்ப்சாமி கோவிலுக்கு அமாவாசை பூஜைக்கு சென்றனர்.ஆட்டோவை, பண்ருட்டி அம்பேத்கர் நகர் மணிகண்டன், 35, ஓட்டிச் சென்றார். பூஜை முடிந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஆட்டோவில் பண்ருட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அரசு அண்ணா பொறியியல் கல்லுாரி அருகே வந்தபோது, எதிரே சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற காரின் முன்புற டயர் திடீரென வெடித்து, தாறுமாறாக ஓடிய கார் ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ நசுங்கியது.ஆட்டோவில் இருந்த கவுரி, 56, அஞ்சாபுலி, 40, ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பரமேஸ்வரி, ராமச்சந்திரன், நிலவழகி, லல்லி, மணிகண்டன் ஆகியோர் இடுபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, பலத்த காயத்துடன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். விபத்தில் இறந்த கவுரி, சென்னை, மயிலாப்பூர் 123வது வட்ட அ.தி.மு.க., மகளிர் அணி பொருளாளராக உள்ளார். விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.