| ADDED : மே 26, 2024 05:45 AM
கடலுார்: கடலுார் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கைக்கான இணைய வழி கலந்தாய்வு வரும் 7ம் தேதி வரை நடக்கிறது.தொழிற்பயிற்சி முதல்வர் பரமசிவம் செய்திக்குறிப்பு:கடலுார், அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் கல்வி ஆண்டுக்கான மாணவியர்கள் சேர்க்கை நடக்கிறது. பயிற்சி நிலையத்தில் பிட்டர், டர்னர், இயந்திரவியலாளர், எலக்ட்ரீஷியன் மற்றும் ரொபோட்டிக் தயாரிப்பு உள்ளிட்ட 5 நவீன உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறியியல் பாடப்பிரிவுகள் உள்ளன.பயிற்சி நிலையத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி மாணவிகள் சேர்க்கை இணைய வழி கலந்தாய்வு துவங்கியது. கலந்தாய்வு வரும் 7ம் தேதி வரை நடக்கிறது.தொழிற்பயிற்சியில் சேர்ந்து படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 750 ரூபாய் உதவித் தொகை, இலவச சீருடை, மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, புத்தகம், காலணி, வரைப்பட கருவிகள் போன்றவை வழங்கப்படுகிறது.எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 50 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.பயிற்சியின் போது முன்னணி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.கடலுார் மாவட்ட மாணவிகள் இணைய தள கலந்தாய்வில் பங்கேற்று தொழில் பயிற்சி வகுப்பில் சேரலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.