பண்ருட்டி: தங்களின் வார்டுகளில் எந்த பணியும் ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து, பண்ருட்டி நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.பண்ருட்டி நகரமன்ற இயல்பு கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.துணை சேர்மன் சிவா, கமிஷ்னர் ப்ரீத்தி, பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது. அப்போது பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர் மோகன், எனது வார்டில் நந்தனார் காலணியில் எந்த பணியும் நடக்கவில்லை. அ.தி.மு.க., கவுன்சிலர் வார்டு என்பதால் புறக்கணிக்கிறீர்கள் என, குற்றம் சாட்டினார். மேலும், ஆவேசமாக பேசிய அவர், சேர்மன் நாற்காலி எதிரில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.அப்போது தி.மு.க.., கவுன்சிலர்கள் ராமலிங்கம், ஆனந்தி, சண்முகவள்ளி பழனி ஆகியோர், அவை நடவடிக்கைக்கு அ.தி.மு.க., கவுன்சிலர் குந்தகம் ஏற்படுத்துகிறார். இதனால் மற்ற வார்டு பிரச்னை பேச முடியாத நிலை ஏற்படுகிறது என்றனர்.இந்நிலையில், நகராட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர் வார்டுகளில் எந்த பணியும் நடைபெறவில்லை. புறக்கணிக்கப்படுகிறது என, குற்றம் சாட்டி, அ.தி.மு.க கவுன்சிலர்கள் மோகன் தலைமையில் சரளாமோகன், சரண்யா, சுவாதி, முருகன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.