| ADDED : ஜூன் 26, 2024 02:24 AM
கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவுகள் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை வேண்டும். கள்ளச்சாராய சாராய சாவுகளை தடுக்கத்தவறிய முதல்வர் ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், மாவட்ட தலைநகரங்களில் கடந்த 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாளான 23ம் தேதி இரவு, கடலுார் தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்ட மேடை அமைக்கப்பட்டது.அப்போது, கடலுார் டவுன் டி.எஸ்.பி., பிரபு, கடலுார் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் மேடையை அகற்றினர். தகவலறிந்த அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையிலான நிர்வாகிகள் நள்ளிரவில் அங்கு திரண்டனர்.போலீசாரால் மேடை மற்றும் அ.தி.மு.க., கொடிகளை பிரித்து அப்புறப்படுத்துவதை பார்த்து அதிர்ந்து போயினர். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக போலீசிடம் அனுமதிக்காக விண்ணப்பம் செய்திருக்கிறோமே, கடலுார் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இங்கு மட்டும் ஏன் மேடையை பிரிக்கிறீர்கள் என, கேள்வி எழுப்பினர். அதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க., வினருக்கும் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும், போலீசார் விடாப்பிடியாக மேடையை முழுவதுமாக அகற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பினர். இதுகுறித்து, மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சரருமான சம்பத்திற்கு கட்சியினர் தகவல் தெரிவிக்க, அவரும் போலீஸ் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசியதோடு சரி. மேடை போனது போனதுதான். மறுநாள் காலையில் (24ம் தேதி) அவசர அவசரமாக மேஜையை போட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தனர்.