விருத்தாசலம்: விருத்தாசலம் வட்டாரத்தில் செம்பேன் பூச்சி தாக்கிய வயல்களை வேளாண் அதிகாரிகள், விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.விருத்தாசலம் வட்டாரத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில், 2,820 ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நெற்பயிர்கள் வளர்ச்சியடைந்த நிலையில், அதிக வெப்பம் காரணமாக செம்பேன் பூச்சி தாக்குதல் அதிகளவு காணப்படுகிறது.இதனை, வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மோதிலால், ராஜபாஸ்கர், நடராஜன், வேளாண் அலுவலர் சுகன்யா, உதவி அலுவலர்கள் ரத்தினம், ராஜிவ்காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.அதில், சாத்துக்கூடல் கீழ்பாதி, மேல்பாதி, ஆலிச்சிகுடி ஆகிய கிராமங்களில் நெல் வயல்களில் கள ஆய்வு செய்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள், செம்பேன் பாதிப்பு அதிகம் இருப்பதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து, பூச்சி பாதிப்பை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன்படி, ஒரு ஏக்கருக்கு பெனாசாகுயின் 10 ஈசி., 400 மி.லி., அல்லது ஊமைட் 400 மி.லி., மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து, செம்பேன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.