| ADDED : மே 06, 2024 05:57 AM
வடலுார் : வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வடலுார் நகராட்சி சார்பில் பொதுஇடங்களில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு கத்தரி வெயில் நேற்று முன்தினம் (4ம் தேதி) துவங்கி வரும் 28 ம் தேதி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பகல்நேரங்களில் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.கத்தரி வெயில் துவங்கிய முதல் நாளில் கடலுாரில் 101.5 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில், பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வடலுார் நகராட்சி நிர்வாகம் சார்பில், முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.அதில், தேவையான அளவிற்கு தண்ணீர் குடித்து, நீரிழப்பு ஏற்பாடாமல் பாதுகாத்துகொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.ஓ.ஆர்.எஸ்., கரைசல், எலுமிச்சை சாறு, தர்பூசணி, முலாம்பழச்சாறு, மோர் போன்றவற்றை பருக வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள திராட்சை, வெள்ளரிக்காய்களை தினசரி சாப்பிட வேண்டும்.வெளியில் செல்லும் போது குடைபிடித்து செல்ல வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், இதயநோய், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் வெப்ப அலைகளால் அதிகம் பாதிக்கப்படுவர். இதனால், மேற்கண்ட நபர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பகல் 12:00 மணி முதல் பகல் 3:00 மணிவரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கி இருந்தது.பொதுமக்கள் நலன் கருதி, நகராட்சி சார்பில் பொதுஇடங்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.