| ADDED : ஏப் 02, 2024 03:57 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் மணிமுக்தாறு பாலத்தில் கீழ் கொட்டப்படும் குப்பைகளை மர்ம நபர்கள் அடிக்கடி தீயிட்டு எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.விருத்தாசலம் பாலக்கரையில் மணிமுக்தாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக திருச்சி, சேலம், ஜெயங்கொண்டம், அரியலுார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பாலத்தில் பயணம் செய்கின்றன.இந்நிலையில், இந்த பாலத்தில் கீழ் மர்ம நபர்கள் குப்பை கழிவுகளை கொட்டிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், இங்கு கொட்டப்படும் குப்பைகளை அடிக்கடி தீயிட்டு கொளுத்துகின்றனர்.இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து போக்குவரத்ததிற்கு இடையூறு ஏற்படுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைகின்றனர்.இந்நிலையில், நேற்று இரவு மர்ம பர்கள் பாலத்தின் கீழ் கொட்டிக்கிடந்த குப்பையில் தீ வைத்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது. தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.