கடலுார், : நெய்வேலி அருகே த.வா.க., பிரமுகர் பலியான விபத்து வழக்கில், கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.நெய்வேலி அடுத்த கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார், 36; த.வா.க., ஒன்றிய ஊடக ஒருங்கிணைப்பாளர். கடந்த 25ம் தேதி, என்.எல்.சி., ஆர்ச்கேட் எதிரே டூ வீலரில் சென்றபோது, நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் ராஜ்குமாரை நிறுத்தினர். உரிய ஆவணங்களும் இல்லாததால் போலீசார், ராஜ்குமார் மற்றும் அவரது டூ வீலரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். காலையில் வந்து டூ வீலரின் உரிய ஆவணங்களை காட்டி வாகனத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். வெளியே வந்த ராஜ்குமார், 26ம் தேதி அதிகாலை சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், விபத்தில் உயிரிழந்தார்.தகவலறிந்த ராஜ்குமார் உறவினர்கள் மற்றும் கட்சியினர், 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். ராஜ்குமார் சாவுக்கு போலீசார் தான் காரணம் எனக்கூறி கோஷமிட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். சி.சி.டி.வி., கேமிராக்களை ஆய்வு செய்ததில், த.வா.க பிரமுகர் ராஜ்குமாரை விபத்து ஏற்படுத்திய ஹோண்டாய் காரை (டி.என் 31பி டபிள்யு 5764 பறிமுதல் செயதனர். மேலும், கார் டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த பெரியரெட்டியப்பட்டியை சேர்ந்த மணிவேல் மகன் ஹரிகரன், 23; என்பவரை கைது செய்தனர்.விசாரணையில் ஹரிகரன் சென்னை முகப்பேரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். கம்பெனி மேனேஜர் திருமணத்திற்காக, கம்பெனி ஊழியர்களை அழைத்து வந்தபோது விபத்து நடந்தது தெரியவந்தது. சாலை மறியல்
வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலை கீழக்கொல்லை கிராமத்தில் உள்ள ராஜ்குமார் வீட்டின் எதிரே, பகல் 11:30 மணிக்கு, ராஜ்குமார் குடும்பத்தினருக்கு வேலை, நிவாரணம் வழங்க கோரி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகளின் சமாதானத்தையடுத்து, 12:15 மணிக்கு மறியலை விலக்கி கொண்டனர். இதனால் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.