விருத்தாசலம் : 'திராவிட மாடல் ஆட்சிக்கு நற்சான்று கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி' என விருத்தாசலம் நகர்மன்ற சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ் கூறினார்.அவரது பேட்டி: கடலுார் லோக்சபா தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் தி.மு.க., தலைமையில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றார். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.இது, தி.மு.க.,வின் நல்லாட்சிக்கு கிடைத்த நற்சான்றாகும். முதல்வர் ஸ்டாலின் தீவிர சுற்றுப்பயணம், அவரது பிரசாரம் 40 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. மேலும், அமைச்சர் உதயநிதி 40 தொகுதிகளிலும் சுற்றி வந்து வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளார்.கடலுார் மேற்கு மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும் அமைச்சர் கணேசன் ஓய்வின்றி வீடுதோறும் சென்று, தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றிக்கு உழைத்துள்ளார்.மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம் என பல திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த முதல்வர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது.கடலுார் லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் வெற்றிக்கு அயராது பாடுபட்ட தி.மு.க., மற்றும் இளைஞரணி, சார்பு அணி நிர்வாகிகள், இண்டியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரின் ஆட்சிக்கு நற்சான்று அளித்த கடலுார் லோக்சபா தொகுதி வாக்காளர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.