விருத்தாசலம்: கடலுார் தொகுதியில் பா.ம.க., நிர்வாகிகளுக்குள் கோஷ்டி பூசல் குறையாததால், தேர்தல் முடிவில் மாம்பழம் இனிக்குமா கசக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கடலுார் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க., வேட்பாளராக சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். சினிமா பிரபலம் என்பதால் கட்சித் தொண்டர்களிடம் அதிக பிரபலம் இல்லாதவர். இதனால் பா.ம.க., வெற்றியை தடுக்கும் வகையில், தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளராக டாக்டர் விஷ்ணு பிரசாத் களமிறங்கியுள்ளார். இவர், பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் மைத்துனர் என்பது அனைவரும் அறிந்ததே.அதுபோல், பா.ம.க.,வில் மூத்த நிர்வாகிகள் முதல் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் வரை கோஷ்டி பூசல் குறையாமல் உள்ளது. இதுவே சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் பா.ம.க., வேட்பாளர்கள் வெற்றிக்கு பெரும் தடையாக உள்ளது. இதனை நன்கு அறிந்த தோட்டத்து நிர்வாகிகளும், கோஷ்டி பூசலில் ஈடுபடுவோரை கண்டிக்காமல், அதனை ஊக்கப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது பல தேர்தல் முடிவுகளில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.தங்கர்பச்சான் வேட்புமனு தாக்கல் செய்ததும், மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, அவருடன் இருந்த நிர்வாகிகள், தங்களுக்கு பிடிக்காத நிர்வாகிகள் சிலர் தொண்டர்களை திரட்டி வைத்திருந்தபோதும், அவரை சந்திக்க விடாமல், வேட்பாளரை மாற்று வழியில் அழைத்து சென்றனர்.தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் யாரென தெரியாத வேட்பாளரை களமிறக்கியதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.மேலும், கூட்டணிக்கு தலைமையான பா.ஜ.க., நிர்வாகிகளை மதிக்காமல், தங்களை தேடி வருவோரை மட்டுமே அனுசரித்து செல்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதனால், கடலுார் தொகுதியில் மாம்பழம் இனிக்குமா அல்லது கசக்குமா என, அக்கட்சியினர் மத்தியில் பெரும் கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து பா.ம.க.,வினர் கூறுகையில், 'ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடாமல், தங்களை மீறி முன்னுக்கு வந்து விடுவார்களோ என நினைத்து, அவர்களை தோற்கடிக்கும் செயலில் நிர்வாகிகள் அதிக கவனம் செலுத்தினர்.வேட்பாளர்கள் தோல்வியடைந்ததும், குறிப்பிட்ட நிர்வாகிகளை தோட்டத்துக்கு அழைத்து, அவர்களின் பொறுப்புகளை பறிக்கப்படும். ஆனால், கருப்பு ஆடாக இருக்கும் சிலரது செயல்பாடுகள் தெரிந்தும், முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இதனால் வடக்கு மாவட்டங்களில் பா.ம.க., வேட்பாளர்கள் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைவது தொடர்கிறது.மேலும், பா.ம.க.,வின் அடிப்படை கட்டமைப்பு தெரியாத சினிமா இயக்குனர் தங்கர் பச்சானை களத்தில் இறக்கி விட்டு, கட்சிக்காக பாடுபட்ட பலரின் கனவுகளை ராமதாஸ், அன்புமணி சிதைத்து விட்டனர். கட்சிக்கு அப்பாற்பட்ட சினிமா இயக்குனரை களம் இறக்கியதும் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக தவறுகளை மட்டுமே செய்து வரும் பா.ம.க., தலைமை, இந்த தேர்தலில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்' என்றனர்.