கடலுார் : என்னை வெற்றி பெறச் செய்தால் லோக்சபாவில் மக்கள் குரலாக ஒலிப்பேன் என, கடலுார் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து பேசினார்.கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து நேற்று மாலை தனது இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தை திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகில் நிறைவு செய்தார்.அப்போது அவர் பேசுகையில், கடலுார் தொகுதியில் வெற்றி பெற்று வெற்றிக்கனியை முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.,-ஜெ.,- தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியோர் நினைவிடத்தில் சமர்ப்பிப்பேன். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்கான அடித்தளம் தான் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல்.கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 5 ஆண்டு காலம் மக்கள் பணியை சிறப்பாக செய்தேன். அதன் பிறகு மீண்டும் அ.தி.மு.க.,-தே.மு.தி.க., கூட்டணி உருவாகியுள்ளது.கடலுார் தொகுதியில் என்னை வெற்றி பெறசெய்தால், ஏழை, எளிய மக்களும் வெற்றி பெறுவதாக அர்த்தம். உங்களுக்காக லோக்சபாவில் குரல் கொடுக்க என்னை தேர்வு செய்யுங்கள். கடலுார் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். எனக்கு முரசு சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தால் லோக்சபாவில் மக்கள் குரலாக ஒலிப்பேன் என்றார்.முன்னாள் அமைச்சர் சம்பத் பேசுகையில், 'தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து பிரசாரத்திற்கு செல்லும் போது, மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கு மானிய விலையில் மொபட் என பல்வேறு திட்டங்கள் தி.மு.க., அரசு ரத்து செய்து விட்டது.தி.மு.க., ஆட்சியில் மின்கட்டணம், சொத்து வரி உயர்ந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை மீண்டும் நடைப்படுத்த சிவக்கொழுந்தை வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன், மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், மீனவரணி தங்கமணி, மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், ஜெ.,பேரவை ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் மாதவன், கந்தன், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, தே.மு.தி.க., மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், தொகுதி பொறுப்பாளர் பாலமுருகன், துணை செயலாளர் சித்தநாதன், மாநகர செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.