| ADDED : ஆக 08, 2024 12:21 AM
நடுவீரப்பட்டு, : பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் பட்டீஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், 45; இவர், 13 ஆண்டுகளாக சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த இளைஞர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு பயிற்சி அளித்து வருகிறார். 2011 ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 முறை தென்னிந்தியா அளவில் கராத்தே போட்டிகளையும், 2018ல் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடத்தி உள்ளார். இக்கலையை சேவையாக செய்துவருவதாக ராமலிங்கம் கூறுகிறார்.அவர் கூறுகையில், தற்போதுள்ள இளைஞர்கள் பலருக்கு ரத்த சோகை, நீரழிவு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் தங்களது உடல் சோர்வை போக்கிட எந்த வேலையும், பயிற்சியும் செய்வதில்லை. பலர் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி விட்டனர். மேலும் மொபைல் போனில் வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்கி வருகின்றனர்.இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மனநிலையை மாற்றி,மனதை ஒரு நிலைபடுத்திடவும், உடல் திடகாத்திரமாக வைத்துக்கொள்ளவும் கராத்தே, சிலம்பம் போன்ற தற்காப்பு கலை பயிற்சிகள் உதவுகிறது.இந்த பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என, தெரிவித்தார். இவரது அமைப்பு, பண்ருட்டியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி, சிலம்பம், கராத்தே உள்ளிட்டவைகளில் தொடர்ந்து 33 நிமிட சாகசம் செய்து உலக சாதனை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.