| ADDED : ஜூலை 18, 2024 11:17 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள விடுதியை சுற்றியும் முட்புதர் மண்டிக் கிடப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் கடலுார், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார் மாவட்ட மாணவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலை, மாலை வேளைகளில் படிக்கின்றனர். வெளியூரில் இருந்து வரும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வசதியும், விடுதி வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. அதன்படி, வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள், ஆலடி சாலையில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படிக்கின்றனர்.இந்நிலையில், விடுதியை சுற்றியும் முட்புதர்கள் மண்டிக் கிடப்பதால் விஷ ஜந்துக்கள் அபாயம் அதிகரித்துள்ளது. பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வெளியேறி விடுதிக்குள் தஞ்சமடைவதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் கடந்தாண்டு செய்தி வெளியானபோது, அதிகாரிகள் ஆய்வு செய்து முட்புதர்களை அகற்றினர்.ஆனால், அதன்பின் கண்டுகொள்ளாமல் விட்டதால் முட்புதர் மண்டி, மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதி வளாகத்தில் மண்டிக் கிடக்கும் முட்செடிகளை அகற்றிட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.