விருத்தாசலம் : 'விருத்தாசலம் நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது' என கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நகராட்சி கமிஷனர் ப்ரீத்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உணவுப் பொருட்களை கட்ட பயன்படும் பிளாஸ்டிக் பைகள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப், டீ கப், தெர்மாகோல் கப், இலை வடிவ பிளாஸ்டிக் தாள், ஸ்டிரா மற்றும் தடிமனாக உள்ள பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நானோவன் என்ற நெய்யாத பிளாஸ்டிக் துாக்கு பைகள் போன்வற்றை விற்பனை செய்யக் கூடாது.மாறாக, வாழை இலைகள், தாமரை, பாக்குமர தட்டுகள், உலோக தட்டுகள், பீங்கான் தட்டுகள், பீங்கான் கப், கண்ணாடி குவளைகள், கண்ணாடி பாட்டில்கள், காகித சுருள், துணி பைகள், அலுமினியத்தாள், மண் குவளைகள், மர உறிஞ்சி ஸ்டிரா, சணல் பைகள், துணி கொடிகள் ஆகியவற்றை மட்டுமே வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும். மீறினால் பறிமுதல், அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எனவே, பொது நலனுக்கு கேடு விளைவிக்கம் ஒரு முறையே பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா நகராட்சியாக மாற்றிட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.