லோக்சபா தேர்தல், கடந்த மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்., 19ம் தேதி நடந்தது. ஜூன் 4ம் தேதி, ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பதவியேற்பு விழாவும் முடிந்துவிட்டது.தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் போலீசாருக்கு தேர்தல் பணியாக கருதப்படுகிறது.தேர்தல் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை, கண்காணிப்பு குழு, ஓட்டுப் பெட்டிகள் பாதுகாப்பு, புள்ளி விபரங்கள் சேகரித்தல் என பல்வேறு பணிகளில், கடலுார் மாவட்டத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், போலீசார் என 3,500 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஊக்கத்தொகை வழங்குகிறது. அந்த வகையில், தேர்தல் பணி செய்த கடலுார் மாவட்ட வருவாய் துறையினர், ஆசிரியர்களுக்கு அப்போதே ஊக்கத் தொகை கொடுக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்து 1 மாதத்திற்கு மேல் ஆகியும், இதுவரையில், போலீசாருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.நாள் ஒன்றுக்கு போலீசாருக்கு ரூ. 250, அதிகாரிகளுக்கு ரூ.350 வீதம் வழங்கப்படுகிறது. விடுமுறை நாட்கள் தவிர, கடலுார் மாவட்ட போலீசார் 30 நாட்கள் முதல் 82 நாட்கள் வரை தேர்தல் பணி செய்துள்ளனர். ஒரு போலீசாருக்கு குறைந்தபட்ச தொகையாக ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையில் வழங்கப்பட வேண்டும். அந்த வகையில், மாவட்ட போலீசாருக்கு ரூ.4.55 கோடி தேர்தல் ஊக்கத்தொகை வழங்க வேண்டிய நிலையில்,தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் போலீசாருக்கு தேர்தல் ஊக்க தொகை இதுவரை கிடைக்கவில்லை.இவர்களுடன் தேர்தல் பணி செய்த பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு தேர்தல் ஊக்கத்தொகை உடனடியாக வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கு கிடைக்குமா என்ற ஏக்கத்தில், போலீசார் புலம்பி தீர்க்கின்றனர்.