| ADDED : மே 30, 2024 05:21 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து, கோடை வெயில் 100 டிகிரிக்கு குறையாமல் சுட்டெரிப்பதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கோடை வெயில் இந்து ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே சுட்டெரிக்க துவங்கியது. கடந்த 4ம் தேதி துவங்கி, கடந்த 28 ம் தேதியுடன் கத்திரி வெயில் தாங்க முடியாத அளவில் இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் கோடை மழை பெய்ததால், வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.இதனிடையே, கோடை மழை முடிவுக்கு வந்ததால், கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் வெயில் தாக்கம் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தொடர்ந்து, 103 டிகிரி பாரன்ஹீட் வரையில் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து வானிலையாளர் பாலமுருகன் கூறுகையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை மழை அதிகளவு பெய்துள்ளது. சமீபத்தில் உருவான ரெமல் புயல், ஈரப்பதத்தை ஈர்த்து சென்றுள்ளது. அதனால் வெப்பம் அதிகரித்துள்ளது. அடுத்த மழை வரும் வரை வெப்பம் தொடரும் என, தெரிவித்தார்.