உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதி

கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதி

43 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக...பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கடற்கரையில், 1980ம் ஆண்டு மத்திய துறைமுக அமைச்சகத்தின் கலங்கரை விளக்கங்கள் இயக்குநரகம் சார்பில், கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள 7 நவ்டெக்ஸ்ட் வசதியுள்ளதில் இதுவும் ஒன்று. 30 மீட்டர் உயரத்தில், 15 நொடிக்கு ஒரு முறை வெளிச்சத்தை பாய்ச்சும் சக்தி கொண்டது.கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தகவல் பரிமாற்றம், கடலில் தட்ப வெப்ப நிலை மாற்றங்கள், வானிலை எச்சரிக்கை, மீட்பு நடவடிக்கை போன்றவை குறித்த தகவல்களை நேரடியாக கப்பல்களுக்கு அச்சு வடிவில் தகவல் தெரிவிக்க நவ்டெக்ஸ்ட் என்ற தகவல் தொடர்பு திட்டம் இதில் உள்ளது.மிக பிரகாசமான விளக்குகள் ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு முறை பளிச்சிடும். அதன் ஒளி 25 நாட்டிக்கல் மைல் துாரம் (48 கி.மீட்டர்) பாய்கிறது.பரங்கிப்பேட்டை கலங்கரை விளக்கத்தில், 1980ம் ஆண்டு முதல் இதுவரை பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பார்வையாளர்கள் தற்போது அனுமதிக்கப்படுகின்றனர். செவ்வாய் முதல் ஞாயிற்று கிழமை வரையில், மாலை 3:00 மணி முதல் 5:00 வரையில் பார்வையிடலாம்.கடலுார் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், தங்களின் பயண திட்டத்தில் பரங்கிப்பேட்டை கலங்கரை விளக்கத்தையும் இனி சேர்த்துக்கொள்ளலாம். கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம், பிச்சாவரம் வனக்காடுகள், பரந்து விரிந்து அலைகளுடன் ஆர்பரிக்கும் கடலை ஆனந்தமாய் ரசிக்க முடியும்.இதுகுறித்து, உதவி கலங்கரை விளக்க அதிகாரி வீரமணி கூறுகையில், கலங்கரை விளக்கத்தை சுற்றிபார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு, சுற்றுலா பயணிகள் வசதிக்காக பார்க், குடிநீர், கழிவறை வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கலங்கரை விளக்கத்தில் படி மூலம் ஏறி செல்ல வேண்டும். சுற்றுலா பயணிகள் அதிகளவு வரும் பட்சத்தில் விரைவில் லிப்ட் வசதி, ஸ்டால் வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

கட்டணம் எவ்வளவு

கலங்கரை விளக்கத்தை பார்வையிட கட்டணமாக, நபருக்கு ரூ. 10 வசூக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் 1 வயது முதல் 12வயது வரையிலான சிறுவர்களுக்கு ரூ. 5, வெளிநாட்டினவருக்கு ரூ. 25 மற்றும் , கேமராக்கள் அனுமதிக்க ரூ. 25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ