வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதுக்கே அதிர்ச்சின்னா எப்புடி? சீக்கிரமே உங்களுக்கு எட்டுவழிச் சாலை போட்டு, அதிகாரிகள் விரைவில் வந்து இருக்கிற கொஞ்ச நஞ்ச காசையும் உருவப் போறாங்க.
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நகராட்சி, மாநகராட்சியுடன் இணையும் கிராமங்களுக்கான சொத்து வழிகாட்டி மதிப்பை, இரு மடங்கு உயர்த்தி, அதற்கேற்ப பத்திர பதிவுக்கு தொகை வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடலுார் நகரம், கடந்த 2021ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியின் மக்கள் தொகை இரண்டு லட்சமாகவும், பரப்பளவு 27.65 சதுர கிலோ மீட்டராகவும் உள்ளது. பரப்பளவை அதிகரிக்க அருகிலுள்ள பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, குண்டுஉப்பலவாடி, பச்சையாங்குப்பம், குடிகாடு, கடலுார் முதுநகர், கரையேறவிட்டகுப்பம், அரிசிபெரியாங்குப்பம், திருவந்திபுரம், பாதிரிக்குப்பம், தோட்டப்பட்டு, கோண்டூர், நத்தப்பட்டு, மருதாடு, வெள்ளப்பாக்கம், சேடப்பாளையம், காரைக்காடு மற்றும் செம்மங்குப்பம் ஆகிய 19 கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 23.9.2021ல் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதில் சேடப்பாளையம், காரைக்காடு கிராமங்கள் 2 ம் விலக்கி கொள்ளப்பட்டன. மீதியுள்ள 17 கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.நகராட்சி, மாநகராட்சிகளில் கிராமங்களை சேர்த்தால் 24 மணி நேரம் மின்சாரம், சிறந்த குடிநீர், தரமான சாலை வசதி, போக்குவரத்து, துாய்மை, சிறந்த கல்வி நிறுவனங்கள், மருத்துவம் போன்றவை மக்களுக்கு எளிதில் கிடைக்கும் என 'ஆசை' வார்த்தைகள் சொல்லப்பட்டன.இவையெல்லாம் கிராம பகுதிகளிலேயே கிடைக்கிறது என, சில கிராம மக்கள் மாநகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.மாநராட்சியுடன் இணையும் கிராமங்கள் பெயர் அரசு இதழில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இணையும் கிராமங்களில் பத்திரப்பதிவு செய்வதென்றால் சொத்து வழிகாட்டி மதிப்பு இரண்டு மடங்காக உயர்த்தி, அதற்கேற்ப பதிவு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.அரசிடம் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு காரணமாக சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்ட நிலையில், பத்திரப்பதிவு அலுவலகத்தின் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், பத்திர பதிவுக்கு கூடுதல் தொகை கட்ட வேண்டியுள்ளதால், மாநகராட்சியுடன் இணைய உள்ள கிராம பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பத்திரப்பதிவுத் துறையை சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில், ஏற்கனவே சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்த்தி வாங்குமாறு வாய்மொழி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி சில பத்திரங்கள் பதிவாகின. ஆனால் தற்போது உயத்தப்பட்ட மதிப்பில் வரி வசூலிப்பதா, பழைய வழிகாட்டி மதிப்புப்படி வசூலிப்பதா என குழப்ப நிலை உள்ளது. இனிமேல் வரும் காலங்களில் போகப்போகத்தான் தெரியும் என்றார்.
இதுக்கே அதிர்ச்சின்னா எப்புடி? சீக்கிரமே உங்களுக்கு எட்டுவழிச் சாலை போட்டு, அதிகாரிகள் விரைவில் வந்து இருக்கிற கொஞ்ச நஞ்ச காசையும் உருவப் போறாங்க.