| ADDED : ஆக 13, 2024 05:41 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே முன்னாள் மாணவரை தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியரை கைது செய்யக் கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்த மக்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று பகல் 11:00 மணியளவில், ஆலடி போலீஸ் ஸ்டேஷன் அருகே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் கமலக்கண்ணன் என்பவரை கைது செய்து, அவரை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.ஆலடி போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தியதில், பாலிடெக்னிக் படித்து வரும் இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவரை ஆசிரியர் கமலக்கண்ணன், அவரது நண்பர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து தாக்கியுள்ளார். அதில், மாணவரும், அவரது தந்தையும் காயமடைந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.எனவே ஆசிரியர் கமலக்கண்ணனை கைது செய்யும் வரை மறியலை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறினர். அவர்களிடம் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், ஆசிரியரை பணியிட மாறுதல் செய்ய டி.இ.ஓ.,விடம் தெரிவிப்பதாக உறுதியளித்தார். மேலும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லாவிட்டால், வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரித்தார்.இதையடுத்து மாணவரின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், விருத்தாசலம் - ஆலடி சாலையில் 40 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.