விருத்தாசலம்,: கும்பகோணம் ராமலிங்கம் கொலை குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால், ரூ. 25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கடலுார் மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டி தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனம், மேலத்துாண்டில் விநாயகம்பேட்டை ராமலிங்கம். பாத்திரக்கடை உரிமையாளர். பா.ம.க., முன்னால் நகர செயலாளரான இவர், மதமாற்றம் தொடர்பான மோதலில், கடந்த 2019, பிப்ரவரி 5ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யபட்டார்.இதுதொடர்பாக குறிச்சிமலை முகமது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஸ்வான், அசாருதின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளிகளான திருபுவனம் முகமது அலி ஜின்னா,39; கும்பகோணம் மேலக்காவேரி அப்துல் மஜீத்,40; வடக்குமாங்குடி புர்ஹானுதீன்,31; திருவிடைமருதுார் ஷாஹூல் ஹமீது,30; திருமங்கலக்குடி நபீல் ஹாசன்,31; ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், 'வான்டட்' என்ற தலைப்பில், முகமது அலி ஜின்னா உட்பட ஐந்து பேரின் புகைப்படம், வயது, முகவரி உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய போஸ்டர், மாநிலம் முழுவதும் பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டி தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.அதில், நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சம் வீதம், 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்போர் ரகசியம் பாதுகாக்கப்படும். தகவல் தெரிந்தால், 'தேசிய புலனாய்வு முகமை, எண் 10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கும் 94999 45100, 99623 61122, 044 2661 5100 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.இந்த போஸ்டர்கள், கடலுார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.