மயிலாடுதுறை : அடகு கடைக்காரரிடம் ரூ 7.5 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம், புவனகிரியை சேர்ந்தவர் சந்திரசேகர்,40; அதேபகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். மேலும், அடகு நகைகள் ஏலம் போவதை தவிர்க்க நகையை மீட்டு மறு அடகு வைக்க அல்லது விற்க கமிஷன் அடிப்படையில் நிதி வழங்கி வருகிறார்.இவரது ஏஜெண்டான சிதம்பரத்தை சேர்ந்த அருண், கடந்தாண்டு அக்டோபர் 4ம் தேதி அண்ணாமலை நகர் மணிகண்டன் என்பவர் 25 சவரன் நகையை ரூ.7.5 லட்சத்திற்கு சீர்காழியில் உள்ள வங்கியில் அடகு வைத்து மீட்க முடியாமல் சிரமப்படுவதாகவும், அதனை மீட்டு மறு அடகு வைக்க பணம் கேட்டார். அதனை நம்பிய சந்திரசேகர், அருண் மற்றும் மணிகண்டனுடன் சென்று சீர்காழியில் உள்ள வங்கியில் ரூ.7.5 லட்சத்தை கட்டினார். அப்போது, வங்கி மேலாளர் வெங்கடேசன், தற்போது சர்வர் வேலை செய்யவில்லை. மதிய உணவு வேலை முடித்த பிறகு வருமாறு கூறினார்.அதனைத் தொடர்ந்து சந்திரசேகர், அருண் இருவரும் வௌியில் சென்று வந்தபோது, வங்கியில் மணிகண்டனை காணவில்லை. மேலாளரிடம் கேட்டபோது, நகையை மீட்டு சென்று விட்டதாக கூறினார். மணிகண்டனின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.சந்தேகமடைந்த சந்திரசேகர், மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த நவம்பர் 21ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் டி.எஸ்.பி., ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில், நகை உரிமையாளர் மணிகண்டனை பிடித்து விசாரித்தபோது, சந்திரசேகரிடம் பணத்தை வாங்கி ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கில் சேத்தியாத்தோப்பு ஜெகன், சிதம்பரம் அருண், சீர்காழி தனியார் வங்கி மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் கூட்டு சேர்ந்து செயல்பட்டது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் நேற்று, மணிகண்டன் மற்றும் தனியார் வங்கி மேலாளர் வெங்கடேசன்,44; ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஜெகன், அருண் ஆகியோரை தேடிவருகின்றனர்.