| ADDED : ஜூலை 13, 2024 12:36 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் நகராட்சி, 15வது வார்டு, 12வது குறுக்கு தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்யாததை கண்டித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், கடலுார் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே 11:45 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த பேரிகார்டுகளை இழுத்து சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.அப்போது, அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்சுக்கு வழிவிட பேரிகார்டுகளை போலீசார், அப்புறப்படுத்தி வழி ஏற்படுத்தினர்.அப்போது, போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. பின் பொதுமக்களை சமாதானம் செய்து 12:00 மணியளவில் மறியலை கைவிடச் செய்தனர். தொடர்ந்து போலீசாரின் அறிவுரையை ஏற்று, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத்தை சந்தித்து குறைகளை தெரிவித்தனர். ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என ஆர்.டி.ஓ., உறுதியளித்ததை யேற்று, அனைவரும் 12:45 மணியளவில் கலைந்து சென்றனர்.